1897 – உலகின் முதல் கைரேகை ஆவணக் காப்பகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. ஆம்! குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கைரேகையைப் பயன்படுத்திய முதல் நாடு (ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்த) இந்தியாதான்! உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட, தற்போதைய ‘தானியங்கி கைரேகை அடையாளம்காணும் அமைப்பிற்கு’ அடிப்படையாக அமைந்த, ‘ஹென்றி வகைப் படுத்தல் முறை’, லண்டன் காவல்துறை ஆணையராகப் பணிபுரிந்தபின் இந்தியா வில் பணியாற்றிய எட்வர்ட் ஹென்றி துணையுடன், ஹெம் சந்திரபோஸ், அஸீஸுல் ஹக் என்ற இந்தியர்களால்தான் உருவாக்கப்பட்டது. கி.மு.18ஆம் நூற்றாண்டில் பாபிலோனை ஆட்சிபுரிந்த ஹம்முராபியின் காலத்திலேயே, கைது செய்யப் படுபவர்களின் கைரேகையைப் பதிவுசெய்யும் நடைமுறை இருந்திருக்கிறது. எந்த இரு மனிதர்களின் கைரேகையும் ஒன்றாக இருக்காது என்று அறிந்திருந்ததால், சீனர்கள் மனிதர்களை அடையாளம்காண கைரேகையைப் பயன்படுத்தியதாக, கி.பி.13ஆம் நூற்றாண்டின் ஈரானிய மருத்துவர் ஹமாதனி குறிப்பிட்டிருக்கிறார். 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான், கைரேகை கவனத்திற்குரியதாகி, 1788இல்தான் ஜெர்மானிய உடற்கூறியலாளர் கிறிஸ்டோஃப் மேயர், கைரேகை தனித்துவமானது என்பதை அறிவித்தார்.
1823இல் செக் நாட்டு உடற்கூறியலாளர் புர்க்கைன், கைரேகைகளின் 9 வகைகளைக் கண்டறிந்தார். 1840இல் ரஸ்ஸல் பிரபு என்பவர் கொல்லப்பட்டபோது, விசாரணைக்கு கைரேகைகளைப் பயன்படுத்து மாறு ராபர்ட் ஓவர்டன் என்ற மருத்துவர் பரிந்துரைத்ததை, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை ஏற்கத் தவறியது! 1880இல் டோக்கியோவில் பணிபுரிந்த ஸ்காட்லாந்து மருத்துவர் ஹென்றி ஃபால்ட்ஸ், கைரேகைகளின் பயன்பாடுகள், மையால் பதிவுசெய்தல் ஆகியவை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டதுடன், 1886இல் இங்கிலாந்து திரும்பியதும், லண்டன் காவல்துறையை இதற்காக அணுகியபோது, அது ஏற்கவில்லை! பிரான்சிஸ் கால்ட்டன் என்ற ஆங்கிலேய பல்துறை விற்பன்னர், 1892இல் வெளியிட்ட ‘கைரேகைகள்’என்ற நூலில், ஒரே மாதிரி இரு கைரேகைகள் இருப்பதற்கு 6400 கோடியில் ஒரு வாய்ப்புதான் உண்டு என்று அறிவித்தார். 1892இல் அர்ஜெண்டினாவில் இரு குழந்தைகளைக்கொன்ற தாய், சுவரில் ரத்தத்தால் பதிந்திருந்த கைரேகையால் தண்டனை பெற்றதே, உலகின் முதல் கைரேகை பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்ட குற்றமாகியது. குற்றவாளிகளின் ஆவணங்களை வகைப்படுத்த கைரேகையைப் பயன்படுத்தலாம் என்று ஒரு குழு பரிந்துரைத்தது. 1897இல் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து கல்கத்தா கைரேகை ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டது. இதன்பிறகே, 1901இல் ஸ்காட்லாந்து யார்டு, 1902இல் அமெரிக்க காவல்துறை ஆகியவை கைரேகையைப் பயன்படுத்தத் தொடங்கின.
- அறிவுக்கடல்