tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் ஜவகர் காலமானார் - தூத்துக்குடி மாவட்டக்குழு செவ்வஞ்சலி!

மூத்த தோழர் ஜவகர் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், கட்சியின் மாநில அலுவலக செயலாளராகவும், கோவில்பட்டி முன்னாள் தாலுகா செயலாளரும், தீக்கதிர் முன்னாள் மேலாளரும், ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், மூத்த தோழர்  ஜவஹர் கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 மணியளவில் காலமானார்.

தோழர் ஜவகர் 1986 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம்  பிரிக்கப்பட்ட போது முதல் மாவட்ட செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, கோவில்பட்டி தாலுகா செயலாளராகச் செயல்பட்டார். பின்னர் கட்சியின் மாநிலக்குழு முடிவின் படி மாநிலக்குழு அலுவலகச் செயலாளராகச் செயல்பட்டு வந்தார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு முழுவதும் சங்கத்தினை பலப்படுத்துவதற்கு உருவாக்குவதற்காகச் செயல்பட்டார், கோவில்பட்டி தாலுகா பகுதியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

தோழர் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும்.

தோழர் ஜவகர் அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.