தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காலம் தவறி பெய்த கனமழையால் உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்புஉற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 1¾ கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத்தில் 1¼ கோடி டன் உப்பும், தூத்துக்குடியில் 25 லட்சம்டன் உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரையில் உப்பு உற்பத்தி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி தொடங்குவது பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு மாதம் தாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உப்பின் தேவை அதிகரித்து இருப்பதாலும், உப்பு உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாலும், ஏற்கனவே இருப்புவைக்கப்பட்டு உள்ள உப்பின் விலை தரத்துக்கு ஏற்ப டன்னுக்கு ரூ.1,800 வரை விற்பனையாகி உள்ளது. இதற்கு முன்பு ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விற்பயைாகி வந்தது.இதுகுறித்து தூத்துக்குடி சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது சுமார் 2½ லட்சம் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு மாதம் தாமதமாக உப்பு உற்பத்தி நடைபெறும். கொரோனாவுக்கு கல் உப்பு நல்ல நோய் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இதனால் இந்த உப்பை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த உப்பின் தேவை தற்போது அதிகரித்து உள்ளது. ஆனால் இருப்பு குறைவாக உள்ளதால், உப்பு விலை தரத்துக்கு ஏற்ப அதிகரித்து உள்ளது. புதிய உப்பு வரத்தொடங்கிய பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.