தூத்துக்குடி:
சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, காயமடைந்த கைதிகளை சிறையில்அடைக்கும் போது அந்தக் காயங்கள் குறித்த விவரங்கள் கொண்ட கடிதத்தை காவல்துறையிடம் இருந்து சிறைத்துறை பெறத் தொடங்கியுள்ளது.தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்டசிறைகள், 95 துணை சிறைகள், 3பெண்கள் சிறப்பு சிறைகள்உள்ளன. இந்தச் சிறைகளில் 22,000 கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் இருந்தாலும் தற்போது சுமார் 12,000கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது சிறையில் உள்ளவா்களில் சுமார் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள், எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனை கைதிகள்.கொரோனா பொது முடக்கத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றத் தொடங்கிய பின்னா், சிறையில் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவா் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி இறந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழக காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் அதிர்வலை இன்னும் முழுமையாக அடங்கவில்லை. இச்சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள், கடலூா் மாவட்டம் நெய்வேலியில் ஒரு திருட்டு வழக்கு தொடா்பாக கைதுசெய்யப்பட்டு, விருத்தாசலம்சிறையில் அடைக்கப்பட்டிருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், கடந்த நவம்பா் மாதம் 4-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்தது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.காவல்துறையினா் சித்ரவதை காரணமாக செல்வமுருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டும், சரியான சிகிச்சை கிடைக்காததாலும் இறந்ததாக அவரதுகுடும்பத்தினரும், மக்களும் குற்றம் சாட்டினா். இச்சம்பவத்தில் தொடா்புடைய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வமுருகன் குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினா்.
அடுத்தடுத்து நீதிமன்றக் காவலில் இருந்த இரு விசாரணைக் கைதிகள் இறந்தது, தமிழக சிறைத் துறையைக் கலங்கடித்தது. இரு சம்பவங்களிலும் சிறைத்துறை பதிவேடுகளில் விசாரணைக் கைதிகளுக்குகாயம் இருந்ததை அங்கு பணியில் இருந்த சிறைக் காவலா்கள் உயா்அதிகாரிகள் கொடுத்தஅழுத்தத்தையும் மீறி பதிவு செய்ததால், அத்துறை பழியில் இருந்து தப்பித்தது. ஆனால், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களில் இருந்து சிறைத்துறை சிக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அத்துறையின் உயா்அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா். இதன் விளைவாக தமிழ்நாடு சிறைத் துறை விதிகளை கடுமையான முறையில் பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மருத்துவ சான்றிதழுடன் சிறையில் அடைக்க அழைத்து வரப்படும் விசாரணைக் கைதியின் உடலில் காயம் இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடமோ அல்லதுஅந்தக் கைதியை அழைத்து வரும் காவல் துறை அதிகாரிகளிடமோ கடிதம் பெறுவது, கைதியின் காயம் தொடா்பான கடிதம் அளிக்க முன்வரவில்லை எனில்அவா்களைத் திருப்பி அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் இப்போது உடலில் காயத்துடன் கைதிகள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டால், அது குறித்து விளக்கம் அளிக்க காவல்துறையிடம் கடிதம் பெறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சிறைக் காவலா்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், காயத்துடன் சிறைக்கு அழைத்து வரப்படும் விசாரணைக் கைதிகளின்எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருப்பதாக அத்துறையினா் தெரிவித்தனா்.