தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்த சுமார் 9 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில் நகரான தூத்துக்குடியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், பெரிய மால்கள், சிப்காட் வளாகத்தில் உள்ளபல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்கள், கெமிக்கல் நிறுவனங்கள், நகை கடைகள் என பல்வேறு நிறுவனங்கள் தங்கள்நிறுவனங்களில் பணியாற்றிய 50 சதவீத தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கி விட்டன. இதனால் தூத்துக்குடியில் 9 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கின் போது தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க கூடாது, கடன்களுக்கு வட்டி பெறக்கூடாது. மேலும் வீடுகளுக்கு வாடகைபெறக்கூடாது என பல்வேறு அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால் அதையெல்லாம் பின்பற்றாமல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்த்தவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்து அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை என வேலை இழந்தவர்கள் புலம்புகின்றனர். குடும்ப செலவு, மருத்துவசெலவு,படிப்பு செலவுகளை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.