tamilnadu

img

பணியின் போது காயமடைந்த துப்புரவு தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5 -திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களிலும் நுண் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி கீழஅரண்சாலையில் உள்ள அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட நுண் உரம் செயலாக்க மையத்தில் 16 பேர் வேலை செய்து வருகின்றனர். புதனன்று காலை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை கிருஷ்ணகுமாரி(35) சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை இயந்திரத்தின் பெல்டில் மாட்டி எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து தகவலறிந்த துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா மற்றும் சங்கத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கிருஷ்ணகுமாரிக்கு ஆறுதல் கூறினர்.பின்னர் இளையராஜா செய்தியாள ர்களிடம் கூறுகையில், இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த கிருஷ்ணகுமாரி மருத்துவ செலவை ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும். மேலும் அவர் சிகிச்சை பெறும் காலங்களில் அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கி சம்பளம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.