தஞ்சாவூர், ஏப்.18-தஞ்சை குறிச்சித்தெரு வாக்குச்சாவடியில் 314 ஓட்டுகள்பதிவான நிலையில் 46 ஓட்டுகள் கூடுதலாக இயந்திரத்தில் காண்பித்ததால், பூத் ஏஜென்ட்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை கீழவாசல் குறிச்சித் தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 43 ஆவது வாக்குச்சாவடி மையமான குறிச்சித்தெரு பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 846 வாக்குகள் உள்ளன.இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் 314 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அப்போது இயந்திரத்தை சரி பார்த்த போது 360 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக காண்பித்தது. இதனால் வாக்குச்சாவடியில் இருந்த அரசியல் கட்சி முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகவாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டது. இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு அரசியல் கட்சியினரும் திரண்டு வந்தனர். தேர்தல் அதிகாரி சுரேஷ் அங்குவந்து விசாரித்தார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் தொடங்கும் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதை நீக்கவில்லை. அதனால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பதிவான இயந்திரத்தை சீல் வைத்து விட்டு, புதிய இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 1 மணி நேரம் வாக்காளர்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.இது குறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது; வாக்குபதிவு இயந்திரம் கோளாறு பல இடங்களில் உள்ளன.மாதிரி ஓட்டுகள் பதிவுகளையும், பதிவான ஓட்டுகளையும் கணக்கு செய்தாலும், கணக்கு தவறாக வருகிறது. அதே நேரத்தில் பதிவான ஓட்டுகளை விட லோக்சபா வேட்பாளருக்கு 6 ஓட்டுகளும், சட்டசபை வேட்பாளருக்கு 10 ஓட்டுகளும் குறைவாக உள்ளன" என்றனர்.