tamilnadu

img

அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 7- திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்ப்பதை கைவிட்டு மருத்துவர்கள் தலைமையில் பிரசவம் பார்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவரை நியமிக்க வேண்டும். தடுப்பு ஊசிகளை முறையாக போட வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மேற்கு பகுதி செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், கிளை செயலாளர்கள் சதாசிவம், லெனின், கணேசன் ஆகியோர் பேசினர்.  கிளைச் செயலாளர்கள் லதா, ராஜேஸ்வரி, ரவி, ஜோசப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து தகவலறிந்து வந்த சுகாதார மைய மருத்துவர் எழில்நிலவன், எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால் அதனை பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து விட்டு கலைந்து சென்றனர்.