ஆம். 1963-ல் தீக்கதிர் பத்திரிகை துவங்கப்பட்ட காலத்தில் இந்திய- சீன எல்லை பிரச்சனை இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக மூண்டது. “போர் தீர்வாகாது: பேச்சுவார்த்தையே தீர்வு’’ என்ற உண்மையை வலியுறுத்தியதால் தீக்கதிர் மேல் தேசத் துரோக பட்டம் அன்றைய ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இன்றைக்கு இந்திய- சீன நட்புறவு மலர்ந்து விரிவடைந்து வருவதை அனைவரும் பார்க்கிறோம். தீக்கதிரின் ’’உண்மையின் பேரொளி’’ என்ற முழக்கம் அன்றைக்கே பிரகாசித்தது.
1975-ல் மத்தியில் ஆண்ட இந்திராகாந்தி அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம். நாடே கொந்தளித்தது. பத்திரிகைகளின் குரல்வளை நெரிக்கப்பட்டது. அதில் தீக்கதிர் பத்திரிகையும் அடங்கும். அநீதிகளையும், ஆட்சியாளர்களின் அக்கிரமங்களையும் தொடர்ந்து எதிர்த்து வந்த காரணத்தால் துவக்கத்திலிருந்தே தீக்கதிர் பல அடக்குமுறைகளை சந்தித்தது. அவசர நிலை கால கெடுபிடி, நமது பத்திரிகையின் பதிப்பாளர், ஆசிரியர்கள் மீது அவதூறு வழக்கு, அரசு விளம்பரங்கள் மறுப்பு, 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையின் போது மதுரை தீக்கதிர் கட்டிடத்திற்கு தீ வைப்பு போன்ற ஏராளமான தாக்குதல்களைச் சந்தித்து வளர்ந்து வந்தது தான் நமது தீக்கதிர் பத்திரிகை.
கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் லட்சக்கணக்கான மக்களின் உரிமைக் குரலாக தீக்கதிர் நாளிதழ் 4 பதிப்புகளாக பீடு நடை போட்டு இயங்கி வருகிறது. வாரப்பத்திரிகையாகத் துவங்கப்பட்ட தீக்கதிர் 1978-ல் நான்கு பக்கங்களுடன் தினசரி ஏடாக வெளிவரத் துவங்கியது. 1963-ல் துவங்கிய தீக்கதிரின் 30-ஆம் ஆண்டு விழாவைத் தொடர்ந்து 1993-ம் வருடம் நவம்பர் புரட்சி தினத்தன்று 2-வது பதிப்பாக சென்னை பதிப்பு துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களால் சென்னை பதிப்பு துவங்கப்பட்டது.
அதன் பிறகு 3-வது பதிப்பாக தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு நாளை போற்றும் வகையில் 2007-ம் ஆண்டு கோவை பதிப்பை கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் 4-வது பதிப்பாக தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் நினைவு நாள், செப்டம்பர்-5 பொன்மலை தியாகிகள் தினம் ஆகிய தினங்களை போற்றும் வகையில் 2010, செப்டம்பர் 5-ல் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களால் திருச்சி பதிப்பு துவக்கி வைக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடைப்பிடித்து வந்த நாசகர பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ஆராதனை மற்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை, சிறு-குறு தொழில் நிறுவனங்களை நிர்மூலமாக்கி அவர்களையும் தெருக் கோடிக்கு கொண்டு வந்து தினந்தோறும் அலைக்கழித்த பண மதிப்பு நீக்கம் எனும் கொடுமை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராகவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களை வங்கி, இன்சூரன்ஸ்,
ரயில்வே, விமான சேவை, பி.எஸ்.என்.எல். போன்ற கோடி, கோடியாக அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் போக்குகளைக் கண்டித்தும் இதனால் பாதிக்கப்பட்ட தேசம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்க தொழிலாளர்கள்,இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற சக்திமிக்க பொது வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை வெளியிட்டு உழைக்கும் மக்கள் பக்கம் கம்பீரமாக நிற்கிறது தீக்கதிர் நாளேடு.தற்போது இரண்டாவது முறையாக 2019-ல் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்கிறோம் என்ற மமதையில் பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக, எதேச்சதிகார போக்குடன் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் இந்துத்துவா அடிப்படைவாதிகளை உயர் பொறுப்புகளுக்கு நியமித்தல், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் தமிழை மறைத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியை புகுத்துவது என்ற பெயரில் சமஸ்கிருதத்தை பாடப் பிரிவுகளில் நுழைப்பது, மருத்துவ படிப்பில் நீட், நெக்ஸ்ட் என்ற பெயரில் எந்த வகையிலும் பொருத்தமில்லாத தேர்வுகளை புகுத்தி கிராமப்புற ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைப்பது, மதச்சார்பின்மைக் கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் ராணுவத்திலும் இந்துத்துவா கொள்கைகளை அமலாக்க முயற்சி, இவைகளை எதிர்த்து கருத்துக்களை சொல்லி வரும் கருத்தியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிவு ஜீவிகளை மதவெறி துணை அமைப்புகள் மூலம் என்கவுண்ட்டர் செய்வது உள்ளிட்ட செய்திகளை நமது தீக்கதிர் பத்திரிகைதான் தெள்ளத் தெளிவாக வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒருபுறம் காவிரி நீர் கிடைக்காததால் விவசாய நிலங்கள் லட்சக்கணக்கில் தரிசாக மாறியுள்ள கொடுமை, ஏரி, குளங்கள், கிணறுகள், ஆறுகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்காமலும், தூர்வாராததாலும் அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போனதாலும் விவசாயிகள் தற்கொலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதவுடன் மத்தியில் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த மகாத்மா காந்தி வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைத்து வருவது, தமிழகத்தில் நடைபெற்று வரும் சாதி ஆணவப் படுகொலைகள், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழும் போராட்டங்களை, இயக்கங்களை, நீதிகேட்டு போராடும் அனைத்துப் பிரிவு மக்களுடனும் தீக்கதிர் தன்னை இணைத்துகொண்டு இயங்கி வருகிறது.
தீக்கதிர் திருச்சி பதிப்பு 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில் பதிப்பின் வளர்ச்சிக்கு அன்றாடம் தங்களது பங்களிப்பை செலுத்தி வரும் செய்திப் பிரிவு, நிர்வாகப் பிரிவு திருச்சி பதிப்பின் வளர்ச்சிக்கும், செய்திகள் சேகரிப்பது, நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விளம்பரம் பெறுவது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் செய்தியாளர்கள், விநியோகப் பிரிவு,அனைத்திற்கும் மேலாக பத்திரிகைகளை இல்லங்கள் தோறும் சந்தாதாரர்களை தேடிச் சென்று சேர்க்கும் முகவர்கள் ஆகியோர்களின் ஒன்றுபட்ட கூட்டு உழைப்பினால் தான் திருச்சி பதிப்பு 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முத்தாய்ப்பாக திருச்சி பதிப்பிற்குட்பட்ட 8 மாவட்டக் குழுக்களில் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் பத்திரிகை சந்தா எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதில் எடுக்கும் இடைவிடாத முயற்சிகள் எனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரணில், பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவில் தீக்கதிரின் பேரொளி மேலும் மேலும் பிரகாசிக்கிறது.
இந்தப் பயணத்தை உறுதியோடு முன்னெடுத்துச் செல்வோம்.
கட்டுரையாளர் : எஸ்.பன்னீர்செல்வம், பொது மேலாளர், தீக்கதிர் திருச்சி பதிப்பு