பெரம்பலூர், ஏப்.26-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஆலத்தூர் வட்டக்குழு கூட்டம் வெள்ளியன்று துறைமங்கலத்தில் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் எஸ்கே.சரவணன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் வேலையறிக்கை சமர்ப்பித்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கருணாநிதி, ஆர்.முருகேசன், மு.ப.அண்ணாதுரை, எ.கணேசன், பி.கிருஷ்ணசாமி, பி.முத்து சாமி, எம்.செல்லதுரை மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்ல துரை, எ.கலையரசி, எஸ்.அகஸ்டின் ஆகி யோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமைகள் செய்த சாதிய ஆதிக்க சக்திகளை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்த அரியலூர் காவல்துறையை கண்டித்தும் வரும் 29-ம் தேதி அரியலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கக் கோரியும், உடனடியாக நேர்மையான விசாரணை நடத்திட காவல்துறையை வலியுறுத்தியும் கட்சியின் ஆலத்தூர் வட்டக்குழு சார்பில் மே 4-ம் தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது.