அதிராமபட்டினம் அருகே விபத்தில் கொத்தனார் பலி
தஞ்சாவூர், மே 29-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (34) கொத்தனார் வேலை செய்து வந்தார். பாலசுப்ரமணியன் புனல்வாசல் கிராமத்தில் வேலை செய்து விட்டு, தனதுமோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அழகியநாயகிபுரம் என்ற இடத்தில் வந்தபோது, அதே கிராமத்தைசேர்ந்த செல்வராசு தனது காரில் பட்டுக்கோட்டை சென்றுவிட்டு வந்து வீட்டின் அருகே காரை திருப்பி உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பாலசுப்ரமணியன் நிலைதடுமாறி காரின் மீது மோதியதில், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் உடலைகைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 3 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்
தஞ்சாவூர், மே 29-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 3-ம் தேதி திங்கட் கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 3 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி கணினிஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சேர்க்கையும், அதனைத் தொடர்ந்து மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. எனவே, கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அவசியம் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பள்ளி வாகனங்களில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, மே 29-திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், வேங்கூர், செல்லம்மாள் மெட்ரீக் மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருவெறும்பூர் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்குட்பட்ட 103 பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் செவ்வாயன்று ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பரிசோதனை செய்யப்பட்டதில் 4 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதிச் சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என்றார். ஆய்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கணேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி,சுந்தரராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜூன் 6-26 வரை திருவாரூரில் வருவாய்த் தீர்வாயம்
திருவாரூர், மே 29-திருவாரூர் மாவட்டத்தில் 1428-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் (ஜமாபந்தி) நிகழ்ச்சி கீழ்க்காணும் விவரப்படி நடைபெற உள்ளது.நீடாமங்கலம் வட்டத்திற்கு ஜூன் 6 முதல் ஜூன் 14 வரை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், திருவாரூர் வட்டத்திற்குஜூன் 6 முதல் ஜூன் 18 வரை மாவட்ட வருவாய் அலுவலர்தலைமையிலும், குடவாசல் வட்டத்திற்கு ஜூன் 6 முதல்ஜூன் 18 வரை திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர்தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டத்திற்கு ஜூன் 6 முதல் ஜூன் 14 வரை மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்திற்கு ஜூன் 6முதல் ஜூன் 18 வரை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முகஉதவியாளர் (நிலம்) திருவாரூர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு ஜூன் 6 முதல் ஜூன் 18 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது.மன்னார்குடி வட்டத்திற்கு ஜூன் 6 முதல் ஜூன் 26 வரைஉதவி ஆணையர் கலால் தலைமையிலும், நன்னிலம் வட்டத்திற்கு ஜூன் 6 முதல் ஜூன் 19 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.மேற்கண்ட நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு) மற்றும் திங்கட்கிழமைகள் நீங்கலாக தினசரி காலை 10 மணிக்கு வருவாய்த் தீர்வாயக் கணக்கு தணிக்கைபணிகள் ஆரம்பிப்பதால் பொதுமக்கள் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் தங்கள் கிராமத்திற்குரிய வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் முடிக்கப்படும் நாளில் நேரில்ஆஜராகி, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர் பாதிப்பை அறிய செல்போன் செயலி அறிமுகம்
தஞ்சாவூர், மே 29-தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புகள் குறித்து கூசூளுஆஹசுகூ என்ற செல்போன் செயலி மூலம்தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துதெரிந்து கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் TNSMART என்ற செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொது மக்கள் தங்களின் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இச்செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம் போன்றபேரிடர் காலங்களில் விழிப்பறிக்கை அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும். பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள TNSMART செயலிபயனுள்ளதாக இருக்கும். அரசு அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து இயற்கை பேரிடரின் போது பயன்பெறலாம். மேலும், இயற்கை பேரிடரால் சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் ஆகியவற்றை படம் பிடித்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இச்செயலியில் உள்ளது என்றார்.