தஞ்சாவூர், மே 3-இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலிலும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை தமிழக அரசின் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி.வசந்தன் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார். மெட்டல் டிடெக்கர் கருவி முறையாக செயல்படுகிறதா?, சி.சி.டி.வி.,கேமரா செயல்பாடுகள், கண்காணிப்பு அறையும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவர், பெரியகோயில் அருகே உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.