தஞ்சாவூர் ஏப்.19-தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பெ.சாந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்றபிளஸ் 2பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 217 பள்ளிகளைச் சேர்ந்த 12,661 மாணவர்களும், 16,203 மாணவிகளும் என மொத்தம் 28,864 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. இதில் 11,083 மாணவர்களும், 15,199 மாணவிகளும் என 26,282 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் 91.05 சதவிகிதம் பெற்று 17 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 90.25 சதவிகிதம் பெற்று 20 வது இடத்தில் இருந்தது.தஞ்சாவூர் மாவட்டத்தில் 92 அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களில் 86.21 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 அரசு பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது.கஜா புயல் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு வட்டாரத்தில் உள்ள 30 அரசு பள்ளிகளில் 9 பள்ளியிலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 26 பள்ளிகளில் 4 பள்ளிகளும், பேராவூரணி வட்டாரத்தில் 7 பள்ளிகளில் 2 பள்ளி மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காடு ஒரு சதவிகிதம்அதிகரித்துள்ளது என்றார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர்கள் பாப்பாம்மாள் (கும்பகோணம்), மஞ்சுளா (தஞ்சாவூர்), பீர்ஜான்(ஒரத்தநாடு), சின்னையன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் உடனிருந்தனர்.