tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலிபான் அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர்  உரையாடல்

புதுதில்லி, மே 16 - ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமையன்று (மே 16) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை, உரையாடலின் போது, அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்.

கடுங்கோடை காலம் முடிவுக்கு வந்தது? பிரதீப் ஜான் தகவல்

சென்னை, மே 16 - கடுமையான கோடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (மே 16) நிறைவு பெறுவதாகவும் பரவலாக இனி மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். எனினும் குளுகுளுவென இருக்காது. வழக்கமான வெய்யிலைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பேலா எம். திரிவேதி ராஜினாமா

புதுதில்லி, மே 16 - உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியான அவர், மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார். நீதிபதி பேலா எம். திரிவேதியின் பிரிவு உபசார விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “நீதிபதி பேலா எம். திரிவேதி எப்போதும் நியாயமானவர். கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர். அவர் நமது நீதித் துறைக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருந்திருக்கிறார். அவர் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதால் அவருக்கு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.