புதுக்கோட்டை, ஏப்.26-குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 ஆம் கல்வி ஆண்டின் 25 சதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏப்.22 ஆம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18 ஆகும். எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க ஏதுவாக மொத்த இடங்களில் 25 சதம் சேர்க்கைக்கு பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினராக இருந்தால் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள் உள்ளிட்டோர் பள்ளிக் கல்வித்துறையின்http//rte.tnschools.gov.in/tamilnadu இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கல்விக் கட்டணமும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பெறக் கூடாது என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.