தஞ்சாவூர் ஜூன்.7- திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட வருவாய் அலுவலரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சினம்பூண்டி கிராமத்தின் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் திருக்காட்டுப்பள்ளி அருகே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது எனக் கூறி மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேலிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், பூதலூர் வடக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, சிவசாமி, முருகேசன், ராஜகோபால், மெய்யழகன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சினம்பூண்டி ஊராட்சி எல்லைக்கு ட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து விவசாய நிலம் மற்றும் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தால் கல்லணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.