tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அதிகாரிகள்

கும்பகோணம், ஏப்.27- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமையில் சனியன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், துணை தலைவர் சுகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய துணை செயலாளர் சேகர், துணை தலைவர் சுபாஷ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள சான்று வழங்குவது, உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட வருடாந்திர சலுகை அட்டைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளைக் கூட நிறுத்தப்பட்டு உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைக்கு சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளது. சென்னை மாற்றுத்திறனாளிகள் இயக்கக ஆணையர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனை தமிழக அரசு தலையிட்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் இயக்கம் செயல்பட வேண்டும். இது தொடரும் பட்சத்தில் சென்னை கோட்டை முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.