சீர்காழி, ஏப்.16-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர், அகரஎலத்தூர் உள்ளிட்ட பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சென்னியநல்லூர், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்குரிய சம்பா நெற் பயிருக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை செலுத்தியிருந்தனர். ஆனால் இதன்பின் உரிய காலத்தை கடந்தும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனைக் கண்டித்து புத்தூர் கடைவீதியில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 100க்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதுகுறித்து 13 கிராம விவசாயிகள் சார்பில் தெற்குராஜன் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் கூறுகையில், போராட்டம் நடத்தியும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை இதுவரை வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை. இதுகுறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர், செயலர் காமராஜ் மற்றும் பொருளாளர் கலையரசன் ஆகியோர் சென்னை நியூ இந்தியா அஸ்சுரன்ஸ் கம்பெனி மேலாளரை கேட்ட போது, எங்கள் கிராமப் பகுதிக்கு வழங்க வேண்டிய முழு காப்பீட்டுத் தொகை ரூ.301 கோடி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை அணுகி கேட்டால் உரிய பதில் தர மறுக்கின்றனர். எனவே 13 கிராமங்களில் உள்ள 3700 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முழு காப்பீட்டுத் தொகையையும் உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.