திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்தஜனவரி 8-ந் தேதி வேலை நீக்கம் செய்யப்பட்ட20 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவழங்கக் கோரியும், 6 மாதமாக வேலை வழங்காமல் வஞ்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் வியாழன் அன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினார்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உதவி ஆணையர் மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இப்பிரச்சனையில் ஆட்சியர் தலையிட்டு 20 தூய்மை தொழிலாளிகளுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆர்டிஓ தலைமையில் 2 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிமுடிவெடுக்கப்படும் என மாநகராட்சி உதவி ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டது. போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் வி.கே.ராஜேந்திரன், செல்வி, மணிகண்டன், மணிமாறன், வீரமுத்து, சீனிவாசன், ஜெயபால், பிரமிளா, கரிகாலன், ராஜா உள்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.