திருச்சிராப்பள்ளி, டிச.3- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே சட்டமாகவும், திட்டமாகவும் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், சங்க மாநிலச் செயலாளர் ஜீவா ஆகியோர் பேசினார். மாநில துணைச்செயலாளர் புஷ்பநாதன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோபிநாத், புறநகர் மாவட்டத் தலைவர் குமார், புறநகர் மாவட்டச் செயலாளர் ரவி, புறநகர் மாவட்டப் பொருளாளர் சுப்ரமணி உள்பட திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், ஸ்ரீரங்கம், மருங்காபுரி, மணப்பாறை, உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.