tamilnadu

img

நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்காத நாளுக்கு நிவாரணம் கோரி தொழிலாளர்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, செப்.9- திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சியில் கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று நூறு நாள் திட்டத்தில் வேலை கோரி மனு செய்த 468 தொழிலாளர்களும், மனு செய்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாததால், வேலை கொடுக்காத நாட்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கி உடனே வேலை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று ஜம்புநாதபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பேரூர், இடையப்பட்டி கிளைகள் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பழநிசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, விதொச நிர்வாகிகள் பி.கிருஷ்ணண். சுப்பிரமணியன், கே.பெரியசாமி, சம்பூர்ணம், திருச்செல்வி, சக்திவேல் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், வரும் வியாழக்கிழமை முதல் 400 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குவது. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 200 பேருக்கு வேலை வழங்குவது. பேரூர் ஊராட்சியில் 1866 பயனாளிகளுக்கும் 100 நாள் வேலை வழங்குவதற்கு ரூ.3.85 கோடியில் வேலை தொகுப்பு உருவாக்கிட பிடிஓ தலைமையில் அரசு அலுவலர்கள் விவசாய தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு அடுத்த 10 நாட்களில் வேலை தொகுப்பை உருவாக்குவது. ஜூன் 25- ஆம் தேதி வேலை கோரி மனு செய்த 468 பயனாளிகளுக்கும் ஜூலை 15 ஆம் தேதி முதல் கணக்கிட்டு தற்போது வரை 50 வேலை நாட்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்டவை முடிவானது.  இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.