கொள்ளிடம், ஏப்.7-நலிவுற்ற கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் நாட்டுப்புற நலச்சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அய்யப்பன் வரவேற்றார், மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், பொருளாளர் கிங்பைசல் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் சிவச்சந்திரன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் நடராஜன்,ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்லையன் நன்றி கூறினார். கூட்டத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தற்போது மாதத்திற்கு ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசைக் கேட்டுக் கொள்வது. கலைப் பண்பாட்டு மையத்தின் மூலம் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளில் பதிவு பெற்ற சங்கங்களில் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.