சீர்காழி, ஏப்.15-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுபடகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிதடைக்காலம் துவங்கியதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் துறைமுகத்தை ஒட்டியும், பக்கிம்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.இது குறித்து பழையாறு துறைமுக விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் பழையாறு பொன்னின்செல்வம் கூறுகையில், மீன்பிடி தடை காலம் ஆரம்பித்துள்ளதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் வலைபின்னுதல், படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். மீன்பிடி தடை காலத்தில் நிவாரணமாக அரசு ரூ.5 ஆயிரம் வீதம் மீனவர்களுக்கு வழங்குகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவாக உள்ளதால் இத்தொகையினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.