தஞ்சாவூர், ஜூன் 16- அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பிரேதங்களை வைத்து கழுத்து எலும்பு அறுவை சிகிச்சை செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியில் கழுத்து எலும்பு நோய் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர், பிற்பகலில் பிரேதங்களை வைத்து அறுவை சிகிச்சை செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் தலைமை வகித்தார். மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளரும், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தலைவருமான ஏ.பாரதி, இருப்பிட மருத்துவ அலுவலர் செல்வம், கல்லூரி துணை முதல்வர் என்.ஆறுமுகம், மெய்யியல் துறைத் தலைவர் டி.சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் குமுதாலிங்கராஜ் கூறியதாவது: கழுத்து பகுதியில் ஏழு எலும்புகள் செல்கின்றன. அதன் வழியாகத்தான் தண்டு வடம் உள்பட அனைத்து நரம்புகளும் செயல்படுகின்றன. வயது முதிர்வு காரணமாக கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்படும். மேலும், தொலைபேசி, செல்போனை ஒரு புறமாக வைத்து தலையைச் சாய்த்துக் கொண்டு பேசுவது, சாலை விபத்து போன்ற காரணங்களாலும் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். கழுத்து எலும்பில் ரத்த ஓட்டம், மூச்சுக் குழாய்கள் இருப்பதால் மிகவும் சிக்கலாக இருக்கும். எனவே, கழுத்து எலும்பில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலானது. இந்த செயல் விளக்கத்தில் பிரேதங்களை வைத்து கழுத்து எலும்பில் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுவாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தான் பிரேதங்களை வைத்து அறுவை சிகிச்சை செயல் விளக்கம் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தான் முதல் முறையாக பிரேதங்களை வைத்து அறுவை சிகிச்சை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே, இக்கல்லூரியில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரேதங்களை வைத்து இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்போது, இரண்டாவது முறையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.