tamilnadu

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் பாதித்து 8 மாதமாகியும் பயிர் இழப்பீடு வழங்கவில்லை-விவசாயிகள் வேதனை

சீர்காழி, ஏப்.1-


நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணை நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டதால் மேட்டூரிலிருந்து அதிகளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரைகளையும் தண்ணீர் தொட்டு கொண்டு தொடர்ந்து10 நாட்கள் ஆற்றில் தண்ணீர் குறையாமல் ஓடியது.இதனால் கொள்ளிடம் வடரெங்கம்,வாடி, பட்டியமேடு, பாலுரான்படுகை,மாதிரவேளுர், கொன்னக்காட்டுபடுகை, சரஸ்வதிவிளாகம், சந்தப்படுகை, நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, கீரங்குடி கரையோர கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை,கத்திரி, வெண்டை உள்ளிட்ட பயிர் களும், முல்லை, மல்லி, காக்கட்டான் உள்ளிட்ட மலர் சாகுபடியும், சோளம், நெல், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்தன. சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வகை பயிர்களும் அழுகி நாசமாகின.வெள்ள நீர் வடிந்த நிலையில், அதிகாரிகள் குழுவினர் சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்தனர். பாதிக்கப்பட்ட பயிருக்கான இழப்பீடு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் 8 மாதங்கள் மேலாகியும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.இதுகுறித்து கொன்னக்காட்டு படுகை விவசாயிகள் கூறுகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் வந்த மிகை வெள்ளத்தால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வகை பயிர்களும்அழிந்து நாசமாகின. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஏழை- எளிய விவசாயத் தொழிலாளர்களின் நலனை கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.