தஞ்சாவூர் மே.17-காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியக் குழு கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் சிறப்புரையாற்றினார். பாபநாசம் நகரச் செயலாளர் முரளி நன்றி கூறினார்.
மின்வாரியம் முன் ஆர்ப்பாட்டம்
கூட்டத்தில், "தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. விவசாயிகளைப் பாதிக்கும் இத்தகைய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பாபநாசம் ஒன்றியத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, தடையின்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தி, சன்னதி தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மே 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது. திருக்கருகாவூர்- திருவையாத்துக்குடி இடையேயான, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடக் கூடாது" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.