tamilnadu

img

ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக பெல் அதிகாரிகள் உறுதி....

திருச்சி:
திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு கள ஆய்வு பணி மற்றும் தடுப்பு மருந்து தொகுப்பு வழங்கும் பணி ஆகியவற்றின் தொடக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது.இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பணிகளைத் தொடக்கி வைத்தனர். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது குறித்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களைக் காப்பாற்ற ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர வேண்டும் என்று பெல் நிறுவனத்திடம் வலியுறுத்தினோம். இதை ஏற்று ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக பெல் அதிகாரிகள் உறுதியளித்தனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவையுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காத நிலையில், ஓரிரு நாட்கள் அவர்களைப் பாதுகாக்க பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகருக்கு 30 அல்லது 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு திருச்சிக்கு 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 300 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.