tamilnadu

அரியலூர் மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்


அரியலூர், ஏப்.10 -அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் முதன்மை செயலாளர்-தலைவர்-நிர்வாக இயக்குநர்-சிறப்பு பார்வையாளர் (மாற்றுத்திறனாளிகள்) முனைவர் பி.சந்திரமோகன் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்தளத்துடன் கூடிய படிகட்டுகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அமைக்கப் பட்டதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக் கப்பட்டது.


பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு காதல் ஜோடி தற்கொலை முயற்சி


கும்பகோணம், ஏப்.10-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரித்துவாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கூலித் தொழிலாளி அருண்குமார். அதே பகுதியை சேர்ந்தஆசைமணி மகள் உமாமகேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிந்தவுடன் உமா மகேஸ்வரியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் அருண்குமார், உமாமகேஸ்வரி குடும்பத்தினரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் பெண் கொடுக்க மறுக்கவே,மனம் உடைந்த இருவரும் செவ்வாயன்று விஷம் அருந்திதற்கொலை முயற்சி செய்தனர். ஆபத்தான நிலையில் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அருண்குமாருக்கு அவரது உறவினர் பெண்ணுடன் திருமணம் நடக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.