திருச்சிராப்பள்ளி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் காலனியில் கடந்த ஏப்.6 அன்று தலித் இளைஞர்கள் அர்ஜுன், சூர்யா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனிக்கிழமை சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் நீலவண்ணன், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் ராஜா,செழியன், மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகிகள் ஜீவா, லதா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டஅமைப்பாளர் புதியவன், ஜனநாயக சமூக நலகூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மயிலாடுதுறை
சோகனூர் இரட்டை படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் திருக்கடையூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.சிம்சன், செம்பை ஓன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கும்பகோணம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் தலைமைவகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, அரவிந்த், நகரச் செயலாளர் செந்தில்குமார், நீலப்புலிகள் இயக்கம் நிறுவனர் இளங்கோவன், விசிக அரசாங்கம், சிபி(எம்எல்) மாவட்டச் செயலாளர் கண்ணையன், தி.க ரமேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.