சீர்காழி, ஏப்.1-
கொள்ளிடத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தின் வடக்கு எல்லையும் கடலூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கும் ஒரு முக்கிய பகுதியாக கொள்ளிடம் இருந்து வருகிறது. கடலூர் மற்றும் நாகைஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடும் இடமாகவும் இருந்து வருகிறது. இதே போல் மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோவில், மாதிரவேளுர் மாதலிஸ்வரர் கோவில், கொள்ளிடம்புலீஸ்வரி கோவில் ஆகிய இடங்களுக்கும் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். புத்தூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசுதொழில்நுட்பக் கல்லூரிக்கும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கொள்ளிடத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு கொள்ளிடம் பகுதியிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இதே போல் பழையாறு மீன்பிடி துறைமுகத் திற்கு தினந்தோறும் வெளி மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இதனால் கொள்ளிடம் பகுதி அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடும் இடமாக இருந்தும் கொள்ளிடம் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் நின்று செல்வதுஇல்லை. எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க கன்னியாகுமாரி மார்க்கமாக செல்பவர்களும், சென்னை மார்க்கமாக செல்பவர்களும் சீர்காழி ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய கட்டாய நிலை உள்ளது.கொள்ளிடம் ரயில் நிலையத்தில் மாயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயில் மட்டுமேநின்று செல்கிறது. வேறு எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்றுசெல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும்கொள்ளிடம் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.