தஞ்சாவூர் ஜூன்.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை செந்தலைவயல் மீனவர் கிராமமாகும். ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு அப்துல் ரகுமான் மகன் சாகுல்கமீது(28) குடிசை வீட்டில் தீப்பற்றியது. கடல் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள அவரது சகோதரர் ராவுத்தர்(30) ஓட்டு வீட்டிற்கு பரவியது. இதில் அவரது வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. அங்கிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு, அவரது சகோதரர் கபூர்(26) குடிசை வீடும், பக்கத்தில் உள்ள சிக்கந்தர் குடிசை வீடும் தீப்பற்றியது. இதில் சிக்கந்தரின் வாய் பேச இயலாத மனைவி சாயிரா பேகத்தை அக்கம்பக்கத்தினர் காயமின்றி மீட்டனர். அப்பகுதி இளைஞர்கள், ஜமாஅத்தார்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் சி.கோவிந்தராஜன் மற்றும் வீரர்கள் ரஜினி, விக்னேஷ் ஆகியோர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டு பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் மாணவர்களின் பாடப்புத்தகங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், உடைகள் ஆகியவையும் தீயில் கருகின. உடமைகளை பறிகொடுத்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கதறி அழுதனர். வீடுகளை இழந்த மக்கள் அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.