மெல்போர்ன்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர்
சனியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், சக நாட்டு வீரரான புஸ்டாவை 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அதிரடிக்கு பெயர் பெற்ற ஆஸ்திரிய வீரர் டோமினிக் தியம் அமெரிக்காவின் பிரிட்ஜை 6-2, 6-4, 6-7(5-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வாவ்ரிங்கா (சுவிஸ்), ரூப்லெவ் (ரஷ்யா), மோன்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் பட்டம் வெல்பவராக கருதப்படும் ருமேனியாவின் ஹாலேப் கஜகஸ்தானின் யூலியாவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற முன்னணி வீராங்கனை முகுருசா (ஜெர்மனி) தரவரிசை இல்லாமல் களமிறங்கி, தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா சுவிட்டோலினாவை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள செக் குடியரசின் பிளிஸ்கோவா தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் அனஸ்டாசியாவிடம் 6-7 (4-7), 6-7 (3-7) என்ற ஸ்டெ கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
கோன்டாவெயிட் (எஸ்டோனியா), மார்டென்ஸ் (பெல்ஜியம்), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பதற்றம் ஆரம்பம்
பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஞாயிறன்று 4-வது சுற்று தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 4-வது சுற்று தான் மிக கடினமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 4-வது சுற்று ஆட்டம் தான் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் மருந்தாக இருக்கும். எவ்வவளவு பெரிய சாம்பியனாக இருந்தாலும் 4-வது சுற்று ஆட்டத்தில் திணறித்தான் வெற்றியை ருசிப்பார். அல்லது தோல்வியை பரிசாக பெற்று செல்வார். இதனால் 4-வது சுற்று என்றாலே பெரும்பாலான வீரர் - வீராங்கனைகள் நடுக்கத்துடனே விளையாடுவார்கள் என்பது குறிபிடத்தக்கது.