மன்னார்குடி, செப்.21- திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலையொட்டி தேவர் தீர்த்தம் என்கிற கமலாலய தீர்த்த குளம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கோவில் தேரோட்டத்திற்கு பிறகு தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். பல்வேறு வகையில் சிறப்பு பெற்ற கமலாலய தீர்த்த குளத்தில் இவ்வருடம் தண்ணீர் வற்றி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்றி புதர்கள் மண்டியிருந்தன. மேலும் கோவில் நிர்வாகமும் வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்திவந்தது. இதையடுத்து சிட்டியூனியன் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் குளத்தை சீரமைக்கவும், குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியும், திருக்குளத்திலுள்ள சிறிய பலகை அடைப்பு மதகுகளை சரிசெய்தும் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கவிதா செய்தியாளர்களிடம் கூறும்போது கமலாலயத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் தற்போது வந்துகொண்டிருக்கிறது. ஒரு வாரகால அவகாசத்தில் குளம் நிரம்பிவிடும் என்று கூறினார்.