tamilnadu

10 ஆண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் ஊழல் தலைவிரித்தாடும் மன்னார்குடி நகராட்சி உடனே ஆணையரை நியமிக்க சிபிஎம் கோரிக்கை

மன்னார்குடி, செப்.18- மன்னார்குடி நகராட்சியின் ஆணையர் பதவியிடம் சுயநல ஊழல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. மக்கள் விரோதமானது. நகராட்சிக்கு ஆணையர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும் நகராட்சி நிர்வாக இயக்குநகரத்தையும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.  சிபிஎம் நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம் இதுபற்றி செய்தியாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மன்னார்குடி நகராட்சி 152 ஆண்டுகளை கடந்த பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்வு நிலை நகராட்சியாகும். இந்நகராட்சிக்கு 2003-2006 வரை நிரந்தர ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எல்லாம் ஒருவரே
இதற்கு பிறகு ஒரு சில ஆணையர்கள் குறுகிய காலமே பணிபுரிந்தார்கள். ஆணையர் மாற்றப்படும் காலங்களில் உடனடி நிர்வாக வசதிகளுக்காக குறுகிய காலத்திற்கு மட்டும் நகராட்சி பொறியாளர் அல்லது நகராட்சி மேலாளர்கள் பொறுப்பு நிலை ஆணையராக தற்காலிகமாக பொறுப்பில் வைக்கப்படுவது நிர்வாக மரபாகும். ஆனால் கடந்த சுமார் பதிமூன்று ஆண்டுகளில் சுமார் பத்து ஆண்டுகள் ஆணையர் பதவியிடம் நிரப்பப்படாமல் இதில் பெரும்பகுதி நகராட்சி பொறியாளரின் கூடுதல் பொறுப்பில்தான் மன்னார்குடி நகராட்சி இயங்கி வருகிறது.  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மன்னார்குடி நகர நிர்வாகம் நகராட்சி பொறியாளரின் ஒற்றை தலைமை நிர்வாகத்தில் மேலும் பலவீனப்பட்டு உள்ளது. நகர திட்டங்களின் மூல வரைவாக்கம் விரிவாக்கம் மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் தொழில்நுட்ப அலுவலரான நகராட்சி பொறியாளரே அதை அனுமதிக்கும், மேற்பார்வையிட்டு கண்காணிக்கும் அதன் செலவினங்களுக்கான தொகைகளை ஒப்பளித்து ஒப்பந்தக்காரர்களுக்கும் அளிக்கும் ஆணையராக மாறியிருப்பதால் சகல துறைகளிலும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. இது அடிப்படையில் மக்கள் விரோத சட்டவிரோத நிலையாகும்.

திறந்தவெளி கழிப்பிடம்
இந்நகரத்தின் மையப்பகுதியான அந்தோணியார் கோயில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களில் சுமார் ஆயிரம் பேர் அன்றாடம் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்துகிறார்கள். மன்னார்குடி நகரில் 12வது வார்டு செட்டிக்குளம், இந்திரா நகர் அய்யர் சமாதி உள்ளிட்ட மன்னார்குடியின் புறநகர் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் திறந்தவெளியில்தான் தங்கள் காலை கடனை கழிக்கிறார்கள்.  மன்னார்குடி பின்லே பள்ளி மைதானம், பேருந்து நிலையங்களில் சுமார் 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட நம்ம டாய்லெட்டுகள் உள்பட நகரின் பல பகுதிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளும், அந்தோணியார் கோயில் தெரு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படாமல் பாழடைந்தும் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் மக்கள் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. தனியார் துப்புரவு பணிகளில் மஸ்டர் முறை நாட்கூலி கணக்கில் கூடுதலாக தொழிலாளர்களின் எண்ணிக்கை கோரப்பட்டு உபரித்தொகையில் ஊழல் நடைபெற்றுவருவதாக கள விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இது ஊழலின் மிக மோசமான அருவருக்கத்தகுந்த வடிவமாகும்.  நகர்புற விரிவாக்கம், பெருகிவரும் குடும்பங்களின் எண்ணிக்கை இவைகளுக்கேற்ப சமீபகால குடிநீர் திட்டங்கள் இல்லாததால் கோடை காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பில் மன்னார்குடி நகர நிர்வாகம் தோல்வியடைந்து உள்ளது. மன்னார்குடி பேருந்து நிலையம் நாற்றமடிக்கும் பேருந்து நிலையமாக மாறியுள்ளது. திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும் மாறி உள்ளது. தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுகாதாரமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கொண்டுவரப்பட வேண்டும்.  நகராட்சிக்கு சொந்தமான மற்றும் நகராட்சி பராமரிப்பில் உள்ள பூக்கொல்லை சாலை, மதுக்கூர் சாலை மனைகள், குடியிருப்புகள், நெடுவாக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலப்பகுதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் நகர நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மன்னார்குடி கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.  மாநிலத்தின் 2வது சிறந்த உழவர் சந்தையான மன்னார்குடி சந்தையை விரிவாக்க இதன் சுற்றுச்சூழலை தூய்மையாக பராமரிக்க சந்தையின் துறை நிர்வாகத்தோடு கலந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நகராட்சியின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நீண்டகாலம் நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக இருப்பதுதான் மன்னார்குடி நகராட்சியில் நிலவும் சகல அவலங்களுக்கும் அடிப்படை காரணம்.  மன்னார்குடி நகரம் புராதன கட்டிடக்கலையுடன் கூடிய கோயில்கள் வீதிகளைக் கொண்ட தெருக்கள் தோறும் குளங்களைக் கொண்ட அழகிய நகராகும். கஜா புயலின்போது பணியாற்றிய ஆணையர் பணிபுரிந்த குறுகிய காலத்தில் மன்னார்குடி நகரம் இந்த அவலங்களிலிருந்து மீண்டு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர் மாற்றப்பட்டார்.  ஆயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத இச்சமயத்தில் இந்திய அரசியலமைப்பு விதி 243W-இன் பன்னிரெண்டாம் அட்டவணையில் வலியுறுத்தப்பட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தின் கடமைகளை நிறைவேற்றவும் நகர மக்களையும் நகர நிர்வாகத்தையும் இணைக்கும் பாலமாகவும் நகரத்தின் முதன் முதல் அலுவலராக நகராட்சி ஆணையர் மட்டுமே இருக்கமுடியும் என்று எங்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. மன்னார்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற. ஊழல் முறைகேடுகளை களைய நகராட்சி நிர்வாக ஆணையரகம் மன்னார்குடி நகராட்சிக்கு உடனே ஆணையரை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் மன்னார்குடி நகரக்குழு கேட்டுக்கொள்கிறது. மன்னார்குடி நகரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான மற்றும் நகராட்சி பராமரிப்பில் உள்ள இடங்களில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மதிப்பீடு செய்யவும் அகற்றுவதற்கும் கோட்ட அளவில் ஒரு வருவாய் அதிகாரியை நியமிக்கவும் கட்சியின் நகரக்குழு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.  இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பதெனவும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் மன்னார்குடி நகராட்சிக்கு ஆணையர் நியமிக்கப்படவில்லை என்றால் நகர மக்களின் பொதுக்கருத்தை ஒன்று திரட்டவும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் இணைத்துக் கொண்டு தொடர் போராட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.