திருவண்ணாமலை,ஏப்.22-திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் படவேடு அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்தார். தீயணைப்பு துறையினர் அவரை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.அப்போது அந்த பகுதிக்கு வந்த சாமியார் ஒருவர் தனநாராயணின் கையை பிடித்துபார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார். அவரை ஜீவசமாதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளம்தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி, உட்கார்ந்தபடி அடக்கம் செய்தனர். இறந்த சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்திணங்க சந்தவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்துவிட்டனர்.இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து, காவல்துறையினர் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை திங்களன்று(ஏப்.22) தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ததுடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.