மாநில போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
திருவண்ணாமலை,ஏப்.1-மாநில அளவிலான போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.ஸ்கோப் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாணவ-மாணவிகளிடையே பொதிந்துள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை வெளிக்கொணர வாய்ப்பு வழங்கப் பட்டது. அதன்படி, 11, 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் பாடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் சுய விருப்பத்துக்கேற்ப தங்கள் பள்ளி, ஊர் அமைந்துள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட பொருள் சார்ந்து திட்டம் தயாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.இவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையிலான குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு பாடத்திலும் தலா ஒரு ஆய் வறிக்கை வீதம் மொத்தம் 7 ஆய்வறிக்கைகளை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தது. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு தாவரவியல் பாடத்தில் இரண்டாமிடமும், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் குழு விலங்கியல் பாடத்தில் 3 ஆம் இடத்தையும் பெற்றது. வென்ற மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் சான்று வழங்கிப் பாராட்டினார்.
இசைக்குழுவுக்கு விருதுகள்
சென்னை, ஏப். 1-ரேடியோ சிட்டி பண்பலை வானொலி நிலையத்தின் சார்பில் சிறந்த இசைக்கலைஞர்கள் பாராட்டப்பட்டனர். இதற்காக இந்த வானொலி ஆண்டுதோறும் ‘ரேடியோ சிட்டி ஃப்ரீடம் விருதுகளை வழங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களின் மொழிகளைச் சார்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் 6 நகரங்களில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 6 இசைக்குழுவினர் பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த சிங்காரோ, தி தயிர் சாதம் பிராஜெக்ட் குழுவினர் விருதுகளை பெற்றனர். மோனிகா தோக்ரா, எமிவேபண்டய், அண்டர்மன், டி.ஜேபாஷ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிடித்த இசைக் கலைஞர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகளை அள்ளி வழங் கினர். இசை அல்லாத சிறந்த வீடியோ, சிறந்த ஆல்பம் ஆர்ட் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.