திருவள்ளூர், நவ.13- அம்மனேரி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (நவ.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள அம்மனேரி ஊராட்சி யில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மழைபொழிய துவங்கியுள்ள தால் இந்த ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்சனை சற்று குறைந்துள்ளது. ஆனால் அம்மனேரி ஊராட்சியில் மட்டும் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் இப்பகுதிமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அம்மனேரி ஊராட்சியின் குடிநீர் பிரச்சனையை போக்க புதிய குடிநீர் தொட்டிகளுக்கு குழய் வசதி ஏற்படுத்த வேண்டும், குடிநீர் வசதி இல்லாத பகுதிகளுக்கு புதிதாக இணைப்புகள் கொடுக்க வேண்டும், மடுவூர், ஆதிராக வபுரம், கொண்டாபுரம் ஆகிய கிராமங்களில் சிதல மடைந்துள்ள சாலைகளை சீரமைக்கப்பட வேண்டும், நியாய விலை கடைக்கு தனியாக கட்டடம் கட்ட வேண்டும், ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.கே.பேட்டை பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிப்பட்டு வட்டக்குழு உறுப்பினர் வி.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி. சந்தானம், மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெருமாள், வட்டச் செய லாளர் கே.ஜி.கணேசன், வட்டக்குழு உறுப்பினர் கே.வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்.கே.பேட்டை பிடிஒ நடரா ஜன் சிபிஎம் தலைவர்களை அழைத்து பேசினார்.இதில் 10 நாட்களில் குடிநீர் பிரச்சனை தீர்க்க நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.