திருப்பூர், ஏப்.11-
திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையத்தில் வீட்டு வாடகை கேட்டு தாக்குதல் நடத்திய உரிமையாளர், அவர் மனைவி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் பெருமாநல்லூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பரமசிவம்பாளையம் ராசன்காடு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் 32 வீடுகளைக் கட்டி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இதில் ஒரு வீட்டில் குடியிருக்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் சிபானி பார்ஜோ (வயது 32) என்பவரிடம் சனிக்கிழமை காலை வீட்டுவாடகை கேட்டபோது, அவர்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாததால் தற்போது வாடகை கொடுக்க இயலாது என கூறினார். இதையடுத்து பாலசுப்பிரமணியம், அவரது மனைவி புஷ்பா மாப்பிள்ளை செந்தில் ஆகியோர் சிபானியையும், அவரது கணவர் மற்றும் உடனிருந்தவர்களையும் ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பெருமாநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிபானி பார்ஜோ பின்னர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியம், புஷ்பா, செந்தில் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.