தாராபுரம், மே 6-தாராபுரத்தில் பர்மிட் இன்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.தாராபுரம் பகுதியில் இரவு, பகலாக கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது. அதுவும், கிராவல் மண் கடத்தும் லாரிகள் இரவு நேரங்களில் அதி வேகமாக செல்வதுடன், லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் மண்காற்றில் பரவுவதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்துபொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் வள்ளல், தாராபுரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, அலங்கியம் ரவுண்டானா அருகே வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது, அந்த லாரியில் செம்மண் எடுத்துச் செல்லப்பட்டதும், அதற்கான உரிய பர்மிட் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.