திருப்பூர், ஏப். 17 -திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு 4ஆம் சுற்று தண்ணீர் செவ்வாயன்று திறக்கப்பட்டது.பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்துக்கு 4ஆம் சுற்று தண்ணீர் திறப்பதற்கு அணையில் போதுமான அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தண்ணீர் திறப்பதற்கு காலதாமதம் செய்கின்றனர். பி.ஏ.பி. தண்ணீரை நம்பி விவசாயம் செய்துள்ள வெங்காயம் உட்பட காய்கறிப் பயிர்கள் அதிகப்படியான வெயில் காரணமாகவும், தண்ணீர் திறப்பு காலதாமதம் ஆவதாலும் கருகும் நிலையில் உள்ளன.ஆகவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கருகும் பயிர்களை காப்பாற்ற 3ஆம் மண்டலத்துக்கு 4ஆம் சுற்று தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஏர்முனை இளைஞர் அணி விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். இந்நிலையில், செவ்வாயன்று திருமூர்த்தி அணை மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி பாசனத்தில் மொத்தம் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். விவசாய நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி மூன்றாம் மண்டல பாசனத்துக்கு முதல் சுற்று தண்ணீர் 21 நாட்கள் திறக்கப்பட்டது. பின்னர் போதிய இடைவெளி விட்டு 2வது, 3வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. செவ்வாயன்று காலையில், 4வது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பிரதான கால்வாயில் 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக 912 கன அடியாக அதிகரிக்கப்படும். 21 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும். பிஏபி பிரதான அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். திருமூர்த்தி அணை கொள்ளளவு 60 அடி உயரமாகும். தற்போது நீர்மட்டம் 49.30 அடியாக உள்ளன. கான்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 841 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.