tamilnadu

img

உண்மையின் பக்கம் நின்று ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்

திருப்பூர், மே 3 –செய்தி சேகரிக்கும் களப்பணியில் அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல்களுக்கு இடையே உண்மையின் பக்கம் நின்று ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் உறுதியேற்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்க வருடாந்திரப் பொதுக்குழு கூட்டமும், மே 3 சர்வதேச ஊடக சுதந்திர தினமும் வெள்ளியன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் சங்கத் தலைவர் இரா.கார்த்திகேயன் தலைமை ஏற்றார். செயலாளர் ச.கதிர்வேல் வரவேற்றார். பொருளாளர் மணிகண்டன் ஆண்டு வரவு செலவு அறிக்கையை முன்வைத்து ஒப்புதல் பெற்றார். இதைத் தொடர்ந்து சங்க வளர்ச்சிப் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியை கௌரவத் தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். மூத்த உறுப்பினர் ஜஹாங்கீர் உள்பட பல்வேறு ஊடக செய்தியாளர்களும் இது குறித்து கருத்துரை ஆற்றினர்.உலகெங்கிலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள், அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஊடக அறத்தை நிலைநாட்ட வேண்டும். ஊடக சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாலுகா செய்தியாளர்களையும் இணைத்து செயல்படுவது, பத்திரிகையாளர் நலன், பாதுகாப்பு, உரிமை ஆகியவற்றை பேணும் வகையில் பணியாற்றுவது என்றும் உறுதியேற்கப்பட்டது. அத்துடன் பத்திரிகையாளர் மனநலம், உடல்நலம் ஆகியவற்றை பேணும் வகையில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்வது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில், தாராபுரம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கிருஷ்ணவேல், திருப்பூர் சன் தொலைக்காட்சி செய்தியாளரின் உதவியாளர் விக்னேஷின் தாயார் மறைவிற்கும், இலங்கையில் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக சங்கத்தின் தொடர்பாளர் பழ.சபரிஸ் நன்றி கூறினார்.