தாராபுரம், மே 18 -தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும் என தாராபுரத்தில் நடைபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க முதல் மண்டல மாநாடு தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்றது. இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வாக அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு கொடியை கே.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். இம்மாநாட்டிற்கு எம்.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் பி.செல்லத்துரை, என்.சுப்பிரமணி ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர். சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், ஊதிய ஒப்பந்தத்தில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசே ஏற்க வேண்டும். 240 நாட்கள் பணி முடிந்த ஆர்சி, ஆர்டி தொழிலாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்யவேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும். பணிமனைகளில் ஓய்வறை, கழிப்பறை, குளியலறை மற்றும் கேண்டீனை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, சிஐடியு மாவட்டதலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், அரசு போக்குவரத்து ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி,கோவை மண்டல பொதுசெயலாளர் வேளாங்கண்ணிராஜ், ஓய்வு பெற்ற ஊழியர்சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இதைத்தொடர்ந்து இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எம்.கந்தசாமி, பொதுச் செயலாளராக பி.செல்லத்துரை, பொருளாளராக என்.சுப்பிரமணி மற்றும் 10 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில் என்.நடராஜன் நன்றி தெரிவித்தார்.