tamilnadu

img

நாட்டு மக்களுக்குப் பதிலாக நாற்காலியை நேசிக்கும் மோடி

திருப்பூர், ஏப். 15 – நாட்டு மக்களை நேசிப்பதே உண்மையான தேசபக்தி, ஆனால் மோடி நாற்காலியைத்தான் நேசிக்கிறார். அவருக்கு இருப்பது போலி தேசபக்தி என்று திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் திங்களன்று திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மண்ணரை பாரப்பாளையம், ஸ்ரீநகர், மகாவிஷ்ணு நகர், ஏ.வி.பி. லேஅவுட், அவிநாசிக்கவுண்டன் பாளையம், அங்கேரிபாளையம், வெங்கமேடு, செட்டிபாளையம், இந்திராநகர், பிரியங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பில் பல்வேறு மதங்களைக் கொண்ட, பல்வேறு வழிபாட்டு முறைகளை கொண்ட, பல்வேறு மொழி பேசக்கூடிய மக்கள் வசிக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் பெண்கள் என அனைவரையும் நேசிப்பதே தேசபக்தி. இந்த தேசத்தின் மக்களை முழுமையாக நேசிப்பதே தேசபக்தி.

ஆனால் மோடி நாட்டு மக்களை நேசிப்பதற்கு பதிலாக நாற்காலியைத்தான் நேசிக்கிறார். அவருக்கு இருப்பது போலி தேசபக்தி. அதற்காக பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்களுக்கு எதிராக கூர்தீட்டி விடுகிறார். மக்கள் பிரிவினர் இடையே பகைத் தீயை வளர்க்கிறார். எனவேதான் தலித், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒரு மொழி ஒரு மதம் ஒரு சட்டம் என்கிறார் மோடி. இதுதான் பாஜகவின் கொள்கை, இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை. இது எப்படி தேசத்தை ஒன்றுபடுத்தும்? மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டார்.இந்த பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் ராமதாஸ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, மாரப்பன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது மண்டலச் செயலாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.