tamilnadu

img

ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள்

திருப்பூர், ஏப். 7–

கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஒரே வாக்கில் மத்தியிலும், மாநிலத்திலும் என இரண்டு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் சனியன்று பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்லடம் ஒன்றியம் சங்கோதிபாளையத்தில் இருந்து துவங்கிய இந்த வாக்கு சேகரிப்புப் பயணத்தைத் திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதில் சமையல் கேஸ்விலை, கேபிள் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய மோடி அரசுக்கு தக்க பாடம் புகட்ட இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.


இதைத்தொடர்ந்து காரணம்பேட்டை, பெருமாகவுண்டம்பாளையம், தேவராயம்பாளையம், கோம்பக்காடு, புதூர், இச்சிப்பட்டி, பெத்தாம்பூச்சிபாளையம், நடுவேலம்பாளையம், வலையபாளையம், பள்ளிபாளையம், பூமலூர்,63 வேலம்பாளையம், அறிவொளிநகர், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், லட்சுமி நகர், உப்பிலிபாளையம், சேகாம்பாளையம், அருள்புரம், நொச்சிபாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், காளிநாதம்பாளையம், அய்யம்பாளையம், பொன்நகர், அக்கணம்பாளையம், சென்னிமலைபாளையம், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகர், பெத்தாம்பாளையம், கள்ளிமேடு, கவுண்டம்பாளையம், குங்குமம்பாளையம், மாணிக்காபுரம், ராசாக்கவுண்டம்பாளையம், காளிவேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்புப் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதையடுத்து வரவேற்புக்கு நன்றி தெரிவித்தும், வாக்கு கேட்டும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ஒரே வாக்கில் இரண்டு அரசுகளை அகற்றக்கூடிய அற்புதமான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு அளிக்கும் வாக்கு மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும், அத்துடன் பாஜகவால் முட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக எடப்பாடி அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் ஒரு கிராம் முதல் 5 பவுன் வரை தங்க நகை அடமானக் கடன் வாங்கியவர்களுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, நலிவைச் சந்திக்கும் தொழில், விவசாயத்தைக் காப்பதற்கும், மக்கள் வாழ்வில் மாற்றம் காணவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தனக்கு சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக, இந்த பயணத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், அவைத்தலைவர் கே.என்.திருமூர்த்தி, மாவட்டத் துணைச்செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.