tamilnadu

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூரில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள்

 திருப்பூர், செப். 12- திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கட்டிடங்கள்  கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள நீண்ட கால மரங்களை பணியாளர்கள் வெட்டி வீழ்த்தி வரு கின்றனர். இது பொது மக்களுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பணிகள் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மரங்களை பாதுகாப்பாக அகற்றி, வேறு இடங்க ளில் மறு நடவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக மரங்களை பணியாளர்கள் வெட்டி வீழ்த்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,  தற்போதைய டவுன்ஹாலில் உள் அரங்கை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பல அடுக்கு கொண்ட மாநாட்டு அரங்கு அமைக்கப்படுகிறது. அதற்கு அருகிலேயே பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடமும் கட்ட திட்டமிட்டுள்ளனர். இப்பகுதியில் தற்போது ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பணிகள் நடைபெறும் இடத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அழிக்காமல் அப்படியே வேருடன் அகற்றி, மறுநடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் நிர்வாகம் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக திடீரென பழமையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இந்நடவடிக்கை அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும், பொது மக்களும் கூறுகின்றனர். சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதாக சொல்கின்றனர். ஆனால் மரங்களை வெட்டிவிட்டு, எப்படி நகரமும், மக்களும் வளர்ச்சி பெற முடியும். இது அடுத்த தலைமுறைக்கான வீழ்ச்சியாகும். மரங்கள் வெட்டுவதை மாநகராட்சி தவிர்க்க வேண்டும். ஏற்கனவே திருப்பூர் மாநகர் பின்னலாடை தொழிலின் வளர்ச்சியின் காரணமாக நீர், காற்று உட்பட பல்வேறு பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நன்கு வளர்ந்த 100 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது வேதனையளிக்கிறது. ஏற்கனவே, பழமையான மரங்கள் மறுநடவு செய்யப்படும்  என மாநகராட்சி உறுதி அளித்த நிலையில், இச்சம்பவம் உள்ளபடியே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகரப் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர வாய்ப்பு உள்ள இடங்களில்  எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, நகரின் பசுமை வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மாநகராட்சி அலுவ லர்களைத் தொடர்பு கொண்டபோது, மரங்களை மறு நடவு  செய்யும் தன்னார்வலர்கள், எல்லா மரங்களும் அப்படி மறு  நடவு செய்யும்போது வளர்வதில்லை, ஆலமரம், அரசமரம்  மட்டுமே மறு நடவில் வளர்கின்றன என்று கூறுகின்றனர். எனவே டவுன்ஹால் பகுதியில் உள்ள பழங்கால மரங்களை  வெட்டாமல் இருக்க அங்கு பணிபுரியும் களப்பணியாளர்க ளுக்கு அறிவுறுத்துவதாக கூறினர். எனினும் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைப் பாதுகாப்பது குறித்து போதிய அக்கறை இல்லாமல் செயல்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் கூறுகின்றனர்.