திருப்பூர், மே 25 –கோடை காலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளித்து, அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான குடிநீரை வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சனியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்று பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஆழ்குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் பல பகுதிகளில் கிடைப்பதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் மாநகராட்சி, மண்டல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் துரித நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் வருகிறது.குறிப்பாக ஆழ்துளைக் குழாய்களில் மோட்டார்கள் பழுதடைந்த நிலையில் நீரேற்றம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பழுதடைந்த மோட்டார்களை உடனடியாக சரி செய்து தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்குழாய் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் இடங்களில் மோட்டார் பழுதடைந்தால், மாற்று மோட்டார்களை உடனடியாகப் பொருத்தி, தண்ணீர் விநியோகம் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதடைந்த மோட்டார்களையும் துரிதமாக சீரமைத்து ஆழ்குழாய்களில் பொருத்தி தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.