tamilnadu

img

குழந்தைகள் நலனுக்கு தனி அமைச்சரகம் ஏற்படுத்த குழந்தைகள், இளைஞர் அமைப்பு தேர்தல் கோரிக்கை

 திருப்பூர், ஏப். 4 -

இந்தியாவில் குழந்தைகள் நலனுக்குத் தனி அமைச்சரகம் ஏற்படுத்த வேண்டும் என்று குழந்தைகள், இளைஞர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் சைல்டு லைன் அலுவலகத்தில் வியாழனன்று சமூக கல்வி மேம்பாட்டு இயக்கம் (சிஎஸ்இடி) குழந்தைகள் கூட்டமைப்பு மற்றும் மாற்றத்திற்கான இளையோர் இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டமைப்பு சார்பில் சத்தியமூர்த்தி, கார்த்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 2019ல் குழந்தைகள், இளையோரின் தேர்தல் கோரிக்கைகளை எங்கள் குழுவினர் விவாதித்து உருவாக்கி இருக்கிறோம். இந்த கோரிக்கைகளை திருப்பூர், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேரில் வழங்க இருக்கிறோம்.இந்த கோரிக்கைகளில் முதன்மையானது, தற்போதுள்ள பல்வேறு சட்டங்களில் குழந்தைகள் என்பதற்கான வயது வரம்பு வேறுபட்டதாக இருக்கிறது. இதை நீக்கி 18 வயது வரையுள்ள அனைவரும் குழந்தைகள் என அனைத்து சட்டங்களும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 18 வயது வரை குழந்தை உழைப்பு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தில் முன்பருவக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.பள்ளி மேலாண்மைக் குழுவில் குழந்தைகள் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.


அரசுப் பள்ளிகளை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது. சுகாதாரமான, தரமான சத்துணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு போதிய நிதி ஒதுக்கி போதிய எண்ணிக்கையில் தொடங்க வேண்டும். சுமங்கலித் திட்ட உழைப்புச் சுரண்டலை தடுக்க வேண்டும்.வளரிளம் பருவத்திற்குத் தேவையான வழிகாட்டி மையங்கள் மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும்.இடம்பெயர்வோர் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகள் கடத்தலைத் தடுக்க வேண்டும். குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்தைகள் மாண்பை சீர்குலைக்கும் அனைத்து ஊடக வெளியீடுகளை தடை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தரமான, சிறந்த மருத்துவ வசதியை உறுதிப்படுத்துவதுடன், மருத்துவம் வணிகமாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். குடும்பம், பள்ளிகளில் நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுஅவர்கள் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.


இளைஞர் நலன்

இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு என்பதால் அவர்கள் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மிகவும் முக்கியம். அதற்கேற்ப தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இடம் பெயர்வோர் அதிகமாக உள்ள நம் நாட்டில் அவர்கள் பல்வேறு வித பாகுபாடுகளுக்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க சரியான வழிமுறைகளை உருவாக்கி அவர்கள் பாதுகாப்பு, உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்.பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் அக்கருத்துகளை இடம் பெறச் செய்ய வேண்டும். உயர் கல்வி, உயர்தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகளை தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கிடைக்கவும், உயர்தர சுகாதாரம், மருத்துவ வசதி கிடைக்கவும் ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிகழ்வில் சிஎஸ்இடி இயக்குநர் நம்பி உள்ளிட்ட சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தோர் உடனிருந்தனர்.