திருப்பூர், மே 16-சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிக்கு அச்சுறுத்தல் வருவதால் சாதி ஆணவக் கொலை நடக்காமல் தடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச் சங்க இணைச் செயலாளர் செ.குணசேகர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்தமனுவில் கூறி இருப்பதாவது: கடந்த 12ஆம் தேதி (ஞாயிறன்று) மதியம் 1 மணியளவில் தஞ்சைமாவட்டத்தை சேர்ந்த கிருத்திகாதேவி (23) என்ற பெண்ணும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தற்போது திருப்பூரில் பணி புரிந்து வருபவருமான தலித் சமூகத்தைச் சேர்ந்த அசோக் (27) என்ற இளைஞரும், எங்கள் சங்கத்தை அணுகி சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கும்படி விண்ணப்பம் கொடுத்தனர். அதன்படி அவர்களுக்கு சீர்திருத்த முறைப்படி எனது தலைமையில் திருமணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினேன்.பிறகு மதியம் 2.30 மணியளவில் பெண்ணின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு காவல்நிலையத்திற்கு அலைபேசி செய்து கிருத்திகாதேவி என்ற பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த விபரத்தை தெரிவித்து விட்டு, தற்போது கிருத்திகாதேவி பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்ல இருக்கும் தகவலையும் தெரிவித்தேன்.அதன் பிறகு, கிருத்திகாதேவி மற்றும் அசோக் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று பாதுகாப்பு கேட்டுமனு கொடுத்தனர். அப்போது, வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருப்பூர் வந்து திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பாதுகாப்பு கோரும்மனுவை இங்கு ஏற்பதில்லை என்றும், வேண்டு மானால்நாளை காலை காவல் ஆய்வாளரை சந்தியுங்கள் அல்லதுமாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்து “ஒப்புதல்” சான்று வாங்கி கொண்டு வாருங்கள் என்று தெரிவித்தனர்.
அதன்படி மறுநாள் (திங்கட்கிழமை) கிருத்திகாதேவி-அசோக் இருவர் உடனும் மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து “ஒப்புதல் சான்று” வாங்கிக் கொண்டு மதியம் 1 மணியளவில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றோம். அங்கு உரத்தநாடு காவல் உதவி ஆய்வாளரும் பெண்ணின் பெற்றோர், உறவினர், அவர்களின் சாதி சங்கம் மற்றும் சாதிக் கட்சியினர் 50க்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து அச்சமடைந்த கிருத்திகாதேவி-அசோக் இருவரும் நாங்கள் சென்றவாகனத்தில் இருந்து இறங்க மறுத்து விட்டனர். நான் மட்டும் உள்ளே சென்று உரத்தநாடு உதவிகாவல் ஆய்வாளரை சந்தித்து பேசினேன்.பின்னர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளர் வீரம்மாளை சந்தித்துபேசினேன். முதலில் வெளி மாவட்ட கலப்பு மண இணையருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மறுத்தவர், மாநகரகாவல் ஆணையரிடம் “ஒப்புதல்”வாங்கிய விபரத்தை தெரிவித்தவுடன் மிகவும் கோபப்பட்டு பேசினார். இறுதியாக இப்படி வெளிமாவட்ட கலப்பு மண இணையருக்காக வருவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று எச்சரித்து கிருத்திகாதேவி-அசோக் இருவரையும் அழைத்து வரச் சொன்னார். இதன்பின் நடந்த விபரத்தை கலப்பு மண இணையர் இருவரிடமும் தெரிவித்தேன். இப்படிச் பேசும் காவல் ஆய்வாளரிடம் ”நியாயம்” கிடைப்பது சந்தேகமே என்றும், மேலும் காவல் நிலையம் உள்ளே செல்லும் போதோ அல்லது வெளியே வரும்போதோ தங்கள் மீது வன்முறை ஏவப்படும் என்றும் பயந்து தங்களை ஓரிருநாட்களுக்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் விடுமாறும்பிறகு தாங்களே என்னை அழைத்து தெரிவித்து விட்டு காவல் நிலையம் வருவதாகவும் தெரிவித்தனர். அதன்படி கிருத்திகாதேவி-அசோக் இருவரையும் “கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லத்தில்” தங்க ஏற்பாடு செய்துள்ளேன்.இந்த சூழ்நிலையில் திங்கள்மதியம் முதல் இன்று வரை கிருத்திகாதேவியின் உறவினர்கள், சாதி சங்கத்தினர் என்னை அலைபேசியில் அழைத்து முதலில் கெஞ்சவும், பிறகு மிரட்டவும் ஆரம்பித்து விட்டனர். எங்கள் சங்க அலுவலகத்தை நோட்டமிட் வருகின்றனர்.ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இதேபோல் சங்கர், கவுசல்யாவை திருமணம் செய்துகொண்டதால் ”ஆணவக் கொலை” செய்யப்பட்டு அந்த வழக்கில் 6 பேருக்கு ”மரண தண்டனை” வழங்கப்பட்டது. ஆகவே, அது போன்றதொரு நிலை மீண்டும் நடந்து விடாமல்தடுக்க வேண்டும் என அம்மனுவில் குணசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.