திருப்பூர், மே 4 - திருப்பூரில் தனது சொந்த பெயரை மாற்றி வசித்து வந்த வங்கதேச இளைஞர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டில் திருடிவிட்டு தலைமறைவானார். திருப்பூர் பட்டுக்கோட்டையார்நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் செவந்தாம்பாளையம் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மோகன் என்ற பெயரில் வடமாநில இளைஞர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். சிவக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்து அவர் வேலைக்குச் சென்றுவந்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமார் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். வீட்டிலிருந்தும் காலி செய்துவிட்டனர்.இந்நிலையில் வெள்ளியன்று சிவக்குமார் குடும்பத்தார் பேக்கரிக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு வேலையை விட்டு நிறுத்தப்பட்ட இளைஞர் வந்து வீட்டுக்கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இது குறித்து சிவக்குமார் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிவக்குமார் வீட்டில் தங்கியிருந்து, தற்போது கொள்ளையடித்துச் சென்றவர் பெயர் முகமது மாஷின் என்றும், அவர் பெயரை மாற்றி இங்கு தங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. தலைமறைவான அவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.