tamilnadu

img

பலத்த காற்றில் அவிநாசி வட்டார வாழை விவசாயிகள் கடும் பாதிப்பு

திருப்பூர், மே 18 -திருப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றினால் பல லட்சம் வாழைகள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் கணிசமான விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகின்றனர். கடந்த மூன்று வார காலமாக அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததில் பல ஏக்கர் பரப்பளவில் வாழைப் பயிர்கள் முறிந்து விட்டன. இதனால் வாழை விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், முறியாண்டாம்பாளையம், சேவூர், பாப்பாங்குளம், வேட்டுவபாளையம், நம்பியாண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சமீபத்தில் பெய்த கோடை மழைக்கு லட்சக்கணக்கில் வாழைகள் சரிந்துவிட்டன. வாழை பயிரிட்டு வளர்த்து 10மாதத்தில் அறுவடைக்குத் தயராகும். ஆனால் தற்போது நடவு செய்யப்பட்டு 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் ஆன வாழைகள் காற்றில் சரிந்துவிட்டன.இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி கூறியதாவது: வாழை பயிரிட ஏக்கருக்கு 10 லோடு குப்பையிட்டு நிலத்தைச் சீர்செய்ய வேண்டும். அதற்கு மொத்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். உழவு செய்வதற்கு ரூ.2500 முதல் ரூ.2750 வரை செலவாகும். ஒரு ஏக்கருக்கு 1200 வாழைக்கன்றுகள் நடவு செய்யப்படும். ஒரு கன்று ரூ.5 வீதம் மொத்தம் ரூ.6000 அதற்குச் செலவாகும். அந்த கன்றுகளைக் கொண்டு வரும் வண்டி வாடகை, பாத்தி கட்டி கன்று நடவு செய்வதற்கு ரூ.7 வீதம் மொத்தம் ரூ.8400செலவாகும். பயிரிட்ட பின் பொட்டாஷ், டிஏபி, யூரியா என 16 மூட்டைகள் உரம் இட வேண்டும். அதற்கு ரூ.11 ஆயிரம் செலவாகும். இரண்டு முறை களை வெட்ட ரூ.10 ஆயிரம் ஆகும். நுண்ணூட்டம் மற்றும் மருந்து தெளிக்க ரூ.5 ஆயிரம் செலவாகும். ஆக மொத்தம் ஒரு ஏக்கருக்கு வாழை நடவு செய்து பராமரித்து வந்தால் ஆறேழு மாதத்திலேயே சுமார் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும்.

நல்ல நிலையில் வளரும் வாழைகள் அறுவடை செய்யும்போது ஒரு தார் 10 கிலோ எடை வரும். ஏக்கருக்கு 10 டன் வாழை கிடைக்கும். சராசரியாக விலை வைத்தாலும் இந்த ஓராண்டு பயிர் மூலம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். முட்டுவழிச் செலவைக் கழித்துவிட்டுப் பார்த்தால் வருடத்தில் ரூ.1.25 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் சுமார்ரூ.10 ஆயிரம் வருமானம் பெறக்கூடிய கணக்குத்தான் வருகிறது.இத்தனை பாடுபட்டு விவசாயம் செய்தாலும் சூறைக்காற்று அடியோடுவாழையைச் சாய்த்துவிடுகிறது. அதனால் எங்கள் வாழ்வும் சூறாவளியில் சிக்கிய நிலைக்கு ஆகிவிடுகிறது என்று கலங்குகின்றனர் வாழை விவசாயிகள்.திடீர் மழை, காற்றினால் ஏற்பட்ட வாழை பாதிப்பு குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக் கலைத் துறை மூலம் கணகெடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சுகந்தி கூறுகையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் பெய்த கோடை மழைக்கு, 44.49 ஹெக்டேரில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 250 வாழைகள் சேதம் அடைந்துள்ளன. அதேபோல் 0.65 ஏக்கரில் பப்பாளி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 219 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து 9 ஆயிரத்து 984 இழப்பீடு கோரி, மாநில பேரிடர் மேலாண்மைத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று வாழை விவசாயிகள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.தோட்டக்கலைத் துறை கணக்கின்படி ஒரு மரத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக சுமார் ரூ.5.50 மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாழை விவசாயிகளைப் பொருத்தவரை முன்பு போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக வாழை பயிரிடாமல் இருந்தனர். தற்போது பயிரிட்டும் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டி உள்ளது.

இழப்பீடு கணக்கிடுவது என்பது அழிவைச் சந்தித்த வாழையை அடிப்படையாக வைத்து கணக்கிடுவது சரியாக இருக்காது. ஓராண்டு பயிரான வாழை முழுமையாக வளர்ந்து அறுவடை செய்யப்பட்டு அதனால் கிடைக்கும் வருவாயையும் கணக்கிட்டால் தான் சரியாக இருக்கும். குறிப்பாக காற்றில் வாழை சாய்ந்ததுடன் பிரச்சனை எங்களுக்கு முடிவதில்லை. சரிந்த வாழைகளை அகற்றுவது பெரும் செலவு பிடிக்கும். அடுத்த ஆறு மாத காலத்துக்கு அந்த நிலத்தில் வேறு பயிர் சாகுபடியும் செய்ய முடியாது.எனவே மொத்த வாழ்வாதார பாதிப்பைக் கணக்கில் கொண்டு வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இழப்பீடு கொடுத்தால்தான் பல்வேறு நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகள்மீள முடியும். எங்களுக்கு வேறுஎந்த வாழ்வாதாரமும் இல்லை, எனவே அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றனர்.அதேபோல் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வது பற்றி அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், பயிர் காப்பீடு சம்பந்தமாக எந்த தகவலும் விவசாயிகளுக்குத் தெளிவாகக் கிடைப்பதில்லை. பிரதான் மந்திரி பஷல் பீமாயோஜ்னா எனப்படும் பயிர்காப்பீடானது, ஒரு ஹெக்டேருக்கு ரூ.5000 வரை செலவு செய்ய வேண்டியது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்பது, இந்த வட்டார வாழை விவசாயிகளை நிர்க்கதியான நிலையில் கைவிடுவதாகப் போய்விடும்.அவிநாசி வட்டார வாழை விவசாயிகள் இதுபோல் அடிக்கடி இயற்கை பேரிடர் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.